திருஞானசம்பந்தர் முக்தி பெற்ற தலம். நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகளான மங்கை நல்லாளை சம்பந்தருக்கு மணம் பேசி முடித்தனர். ஆச்சாள்புரம் கோயிலில் நடைபெற்ற திருமணச் சடங்குகளை திருநீலநக்க நாயனார் முன்னின்று நடத்தினார். திருமணத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவரது துணைவியாரும் கலந்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்தவுடன் அக்கினியை வலம் வரும்போது சிவபெருமான் அசரீரியாகத் தோன்றி, 'அனைவரும் ஜோதியில் கலந்து முக்தி பெருக' என்று அருள்புரிந்தார். அப்போது அங்கு ஒரு சோதி தோன்றிட, சம்பந்தர் 'காதலாகி கசிந்து' என்று தொடங்கும் 'நமசிவாயப் பதிகம்' பாடி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களுடன் சோதியில் கலந்து மறைந்தார். சம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது.
மூலவர் 'சிவலோகநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'திருவெண்ணீற்று உமையம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். சம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பிகையே நேரில் வந்து திருநீறு (வெண்ணீறு) கொடுத்தமையால் இப்பெயர் பெற்றார்.
காகபுசுண்ட முனிவர் முக்தி பெற்ற தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
|